இலங்கையில் தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக மூன்று உபகுழுக்கள் நியமனம்




தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக ஒவ்வொரு துறை சார்ந்தும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயலாளர் மாதவ தேவசுரேந்ர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் முறைமைகள் மற்றும் அது தொடர்பான அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்டக் கட்டமைப்பு தொடர்பான யோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஊடக மதிப்பீடுகள், பெண்கள் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து மற்றுமொரு உப குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.



மற்றைய உப குழுவின் ஊடாக தேர்தலொன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொறுப்புகள் நடத்தை விதிமுறைகளை தயாரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான முதல் கட்ட அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இந்தியா, சிங்கப்பூர், கனடா, பிரித்தானியா, சுவிற்ஸர்லாந்து, எஸ்டோனியா ஆகிய ஜனநாயக தேர்தல் முறைமை காணப்படும் நாடுகளின் தேர்தல் முறைமைகளை ஆராயும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த தேர்தல் முறைகளின் ஊடாக இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய முன்மாதிரி தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் என்றார்.
புதியது பழையவை