வெடுக்குநாறிமலை விவகாரம் - நீதிமன்றத்தில் திணறிய காவல்துறையினர்




வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்ட 07 சிவபத்தர்களையும் ஆலய பூசாரியையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அவர்கள் மீது தொல்லியல் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் பிணையில் வெளிவரக்கூடாது என்பதற்காக இந்த சட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.

நீதிமன்றத்தில் விசாரணை
இந்தநிலையில், கைதானவர்களின் வழக்கு இன்று (19-03-2024) வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கினை கொண்டு நடத்துவதற்கு மேலும் காலஅவகாசத்தை காவல்துறையினர் கோரியை நிலையில் சட்டமா திணைக்களத்திடம் இருந்து சில அறிவுறுத்தல்களை பெறவேண்டி இருப்பதாக நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.


இருப்பினும் காவல்துறையினரால் எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்காத நிலையில் குறித்த வழக்கை முழுமையாக நிராகரித்து சம்மந்தப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை