போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள் - நாடாளுமன்றுக்குள் பதற்றம்!வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்து, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19-03-2024) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தொல்லியல் சட்டம் பாய்ந்துள்ளது.


அவர்கள் பிணையில் வெளிவரக்கூடாது என்பதற்காக இந்த சட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது. கைதானவர்களின் வழக்கு விசாரணை இன்று (19-03-2024) வவுனியா நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.

நாடாளுமன்றுக்குள் போராட்டம்
இன்று அவர்கள் மீதான குற்றப்பத்திரத்தில் திருத்தம் செய்து, அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதன்படி அதிபருடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு சி.வி.விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.

என்றாலும், தமிழ்தரப்புகளை சந்திக்க ரணில் உடனடியாக நேரம் ஒதுக்கவில்லை. புதன்கிழமை பகல் 11 மணிக்கே ரணில் விக்ரமசிங்க சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.


ரணில் விக்ரமசிங்கவின் இந்த நகர்வு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் போராட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தரப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புதியது பழையவை