தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழ முடியும் - அமைச்சர் S.வியாழேந்திரன்



நாங்கள் இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம்.எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமூகம்
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தமிழர்களாகிய நாம் யார் எனும் கோள்வியைக் கேட்டால் நாங்கள் அழிக்கப்பட்ட சமூகத்தினதும், காணாமலாக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்தான்.

எண்ணிக்கையில் நாம் சிறுபான்மையர்களாக இருந்தாலும் தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும். நாங்கள் சொல்வதை இந்த நாடு கேட்கும். எங்களை இந்த நாடே திரும்பிப் பார்க்கும். அவ்வாறாயின் நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும்.


அந்த இரு துறைகளிலும் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு எமது சமூகத்தை நாம் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும்.

அதற்காக அனைவரும் பாடு படவேண்டும். கடந்த வருடம் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம்தான் இலங்கையிலேயே முதலிடம் பெற்றிருந்தது.

கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம்
அதற்காக என்னைத் தேடி வந்து நாட்டின் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். கல்வி என்பது நாட்டின் பிரதமரையே நமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

அதுபோன்றுதான் பிரதமர் தினேஸ் குணவரத்தன அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர் அவர் தற்போதும் இருக்கின்றார்.



எனவே தமிழ் சமூகம் என்பது கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் மாத்திரமின்றி இலங்கை முழுவதையும் கல்வியால் ஆட்சி செய்த சமூகமாகும். அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்தவர்கள் தமிழர்கள்.

மீண்டும் அதே நிலைமைக்கு நாம் வரவேண்டும். இதற்கு அனைவரும் கரம்கோர்த்து உதவுவதற்கு நாம் அனைவரும் தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை