படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் இன்று(28-04-2024) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், அருட்தந்தை க.ஜெகதாஸ், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமைய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் எல்.தேவஅதிரன் மற்றும் தெற்கு பிரதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு
மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
நினைவேந்தலை தொடர்ந்து நினைவுத் தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.