பொலனறுவை மின்னேரிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிரித்தலையாய 04 பகுதியில் துப்பாக்கிசூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவமானது நேற்று(14-04-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவியவருகையில், 17 வயதுடைய சிறுமியொறுவர் 40 வயதுடைய நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்த நிலையில் அவருடன் சில காலம் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குறித்த நபரின் தொல்லை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியதையடுத்து தன்னுடன் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியவந்துள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மற்றும் அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் மற்றும் அவரைக் கைது செய்ய இரண்டு காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மின்னேரிய காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.