புயல் உருவெடுக்கும் அபாயம் - விசேட அறிவிப்பு!வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இந்த நிலையில், இது இன்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும் எனவும், அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று 26 ஆம் திகதி நள்ளிரவில் வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காள கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கேரளாவை ஒட்டி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை