முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்



திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடித்து மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13-05-2024) உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நீதிபதி தஸ்னீம் பௌசான் வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நான்கு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12-05-2024) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் (13) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை