ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!



பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது


2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சமூகத்தில் தீவிரவாதசக்திகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசார தேரர் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு படையினருக்கும் ஆதரவளித்தாகவும் மகாநாயக்க தேரர்கள் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நாட்டில் சிங்கள – பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை