மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரசசார் திணைக்களங்களுக்கிடையில் நடத்தப்பட்டு வந்த 2024ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சவால் கிண்ண மென்பந்து கிறிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய மைதானத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அம்மணி அவர்களில் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரசசார் திணைக்கள உத்தியோகத்தர்களின் உடல் நல ஆரோக்கியத்திற்காகவும் உத்தியோகத்தர்களிடையே புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் கட்டிக்காக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இவ் கிறிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி நாளான இன்று நாளை அனுட்டிக்கப்படும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை ஒட்டி வீரர்களுக்கு புகைத்தல் மற்றும் மதுபான ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரசசார் திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்கள் பிரிவில் மாத்திரம் 59 அணிகள் இத் தொடரில் களங்கண்டிருந்ததுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவு வகைப்படுத்தலுக்கு அமைய இத் தொடர் நடத்தப்பட்டது இச் சுற்றுத்தொடரில் ஆண்கள் பிரிவில் இறுதிச் சமரில் மட்டக்களப்பு கல்வி வலய அணியும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் ராஜபவானின் சகலதுறை பிரகாசிப்பின் உதவியோடு மட்டக்களப்பு கல்வி வலய அணி 2024 அரசாங்க அதிபர் சவால் கிண்ண சம்பியன் மகுடத்தை சூடிக்கொள்ள இரண்டாமிடத்தை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மூன்றாவது இடத்தை மாவட்ட மின்சாரசபை அணியும் நான்காவது இடத்தை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அணிகளும் தனதாக்கி கொண்டன.

பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இச் சுற்றுத்தொடரில் கலந்து கொண்ட இரு அணிகளே பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில்ல மட்டக்களப்பு கல்வி வலய A மகளீர் அணி சம்பியனாகவும் மட்டக்களப்பு B மகளீர் அணி இரண்டாமிடத்தையும் மூன்றாமிடத்தை கிழக்குப்பல்கலைக்கழக அணியும் நான்காவது இடத்தை செங்கலடி பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டன.

இச் சுற்றுத்தொடருக்கு பிரதம அதிதியாக மட்டு மாவட்ட முன்னைநாள் அரச அதிபர் மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசிலுக்கான காசோலைகளும் அதிதிகளால் வழங்கப்பட்டன இறுதி நாளான இன்று பெருந்திரளான அரச உத்தியோகத்தர்கள் இத்தொடரை காண வருகைநந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.புதியது பழையவை