இலங்கையர்களின் அதிருப்தி தொடர்பில் பதிலளித்துள்ள இந்திய அதானி நிறுவனம்



இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் கவலை வெளிபடுத்தப்பட்டது தொடர்பில் இந்திய அதானி குழுமம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் சிறிலங்கா அமைப்பு (Transparency International Sri Lanka), இந்த திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மையை கோரி, தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களை அனுப்பியுள்ள நிலையிலேயே அதானியின் அறிக்கை இந்த வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

"இலங்கையில் முன்மொழியப்பட்ட எமது காற்றாலை மின் திட்டம், அனைத்து தேவையான செயல்முறைகள் மற்றும் தரநிலைகளை கடைபிடித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான மிக உயர்ந்த தரத்தை உறுதிசெய்துள்ளது. 

தொழில்நுட்ப மதிப்பீடு 
அரசாங்கத்திலிருந்து அரசாங்கம் என்ற அடிப்படையிலான இந்தப் பொறிமுறை, இலங்கையின் மின்சாரச் சட்டத்துடன் இணங்குகிறது.


மேலும், முன்மொழிவுக்கான செயல்முறையை பொறுத்தவரையில், நீண்டகால கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தமது நிறுவனம் செயற்பட்டுள்ளது. 

அதேவேளை, எமது இந்த திட்டம் இலங்கை மின்சார சபையின் திட்டக் குழுவின் முழுமையான தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கு உட்பட்டது. 

அதேவேளை, இந்த திட்டத்திற்கான ஒழுங்குமுறை அனுமதியை பொறுத்தவரை, இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எமது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் அனைத்து ஒழுங்குமுறை தரங்களையும் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துகிறது. 


அது மாத்திரமன்றி, இந்த காற்றாலை மின் திட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட கட்டணமானது, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. 

மேலும், எமது திட்டத்தில் அலகு ஒன்றுக்கான விலை 24.78 ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் கட்டணங்களை விடக் குறைவாக உள்ளதுடன் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியை விட கணிசமாக மலிவானது. 

இந்நிலையில், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளாக, இந்த திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அந்நிய நேரடி முதலீடாக 308.7 பில்லியன் கிடைக்கிறது. 


மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் 1,200இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.

இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதுடன் பசுமை ஆற்றல் உற்பத்தி என்ற நிலையில், வருடாந்தம் சுமார் 1,500 மில்லியன் அலகு பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன் 590,000 குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளது.


அத்துடன், ஆண்டுக்கு 100 மில்லியன் டொலர்கள் வரை இலங்கைக்கு பொருளாதார நன்மையை வழங்கும் அதேவேளை 2025ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இந்தத் திட்டம் அரசாங்கத்தின் மின்சார கொள்முதல் செலவினங்களை வருடத்திற்கு 83 மில்லியன் டொலர்கள் வரை குறைக்கவுள்ளதுடன் நுகர்வோர் மின்சாரக் கட்டணத்தை அலகுக்கு 17 ரூபாவாக மாற்றும்” என தெரிவித்துள்ளது.
புதியது பழையவை