விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்-நாடாளுமன்ற உறுப்பினர் சீற்றம்



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.


தமிழ்ப் பொது வேட்பாளர்
இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கல்லில் நார் உரிக்கும் செயற்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.


அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஒன்றுபட போவதில்லை. பதவிப் போட்டிகளைத் தீர்க்க முடியாத கட்சிகள் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலையாகும்.

ஆக மொத்தத்தில் சஜித், ரணில், அனுர, பகிஷ்கரிப்பு, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பஞ்ச நிலை முடிவுகளைத் தான் மக்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.


தமிழ் மக்களின் சாபக்கேடு
மக்களின் இந்த முடிவுகளுக்கு தமிழ்க் கட்சிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. பட்டுணர்ந்தும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட மறுப்பது துரதிஸ்டமானது.

தமிழ் மக்களின் சாபக்கேடானது. அம்பாறை பறிபோய்விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் பறிபோய்விடும்.


இப்படியிருக்க அதிபர்த் தேர்தலில் இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான முடிவுகளை எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை