கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில்
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலக தேவா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள், தொழில் முயற்சியாளர்கள், சமுர்த்தி பயனாளிகள், மற்றும் ஏனைய பொதுவான விடயங்களுக்காக வழங்கப்படும் கடன் சலுகைத்திட்டங்கள், சமூர்த்தி திணைக்களத்தினால் அமைக்கப்படுகின்ற வீடு அமைப்பு திட்டங்கள் தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
மேலும் சமுர்த்தி பயனாளர்களுக்கான கடன் திட்டங்களை அரச திட்டங்களுக்கு அமைவாக விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குமாறு குறிப்பிட்டிருந்ததுடன். “சமுர்த்தி என்பது வறுமை ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்" ஆகவே அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க கடன் திட்டங்களை உடனடியாக விரிவுபடுத்துவதோடு, சிறு முதலீட்டு திட்டங்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை ஊக்குவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது சமுர்த்தி திணைக்களத்தினால் வேலை பணியாட்கள் பற்றாக்குறை சம்பந்தமான விடயம் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் இது தொடர்பாக பேசி விரைவில் இதற்கான தீர்வினை பெற்று தருவதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்திருந்தார்
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டீனா முரளிதரன் மாவட்ட சமூர்த்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு மற்றும் பிரதேச செயலகங்களினுடைய சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.