ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு


ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜூன் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 396 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1758 பேருக்கு நிலுவைத் தொகையுடன் புலமைப் பரிசில்கள்

கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 5,000 புலமைப் பரிசில் பயனாளர்கள்

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, பொருளாதார சிரமங்களோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதானங்களில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள், தமது கல்வியைத் தொடர்வதற்காக ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு 242 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, புலமைப்பரிசில் பெறும் அனைவருக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையுடன் உரிய புலமைப்பரிசில் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தரம் 01 முதல் தரம் 11 வரையான 100,000 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் படி, கொழும்பு மாவட்டத்தில் சுமார் 5,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே வலயக் கல்வி அலுவலகங்களால் ஜனாதிபதி நிதியத்தில்

சமர்ப்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் வழங்கத் தகுதிபெற்றவர்களின் பட்டியலின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 396 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 1758 மாணவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் புலமைப்பரிசில்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் புலமைப்பரிசில் பெறுவது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ (Facebook) முகநூல் பக்கத்தில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு, நிலுவையில்உள்ள புலமைப்பரிசில் தொகை இன்னும் ஒரு சில தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு, அந்தந்த புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு குறுந்தகவல் (SMS) மூலம் அறிவிக்கப்படும்.

இதற்கு இணையாக ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11-06-2024
புதியது பழையவை