இளைஞர் விளையாட்டு கழக வீரர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு!மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழக உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதேச கிளை ஊடாக, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த கழகத்தின் உதைப்பந்து வீரர்களுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சரின் பிராந்திய காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த விளையாட்டுக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்களால் தமது விளையாட்டுக் கழகத்திற்கான பிரத்தியேக விளையாட்டு மைதான தேவை, தமது விளையாட்டுக் கழகத்திற்கான ஏனைய வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததோடு, தமது கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேசக் குழு தலைவர் தர்மலிங்கம் காமராஜ், கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள் விளையாட்டு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை