100 ரூபா திருடிய மகனுக்கு சூடு வைத்த தந்தை கைது!



மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தன் தந்தையின் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் திருடியதால் மகனுக்கு தந்தை சூடு வைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது தனது சட்டைப்பையில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த தந்தை தனது மகனிடம் எனது சட்டைப்பையிலிருந்து பணம் எடுத்ததாயா? என்று கேட்கவும் மகன் ஆம், நான் எடுத்து செலவளித்து விட்டேன் என்று கூறியதும் தந்தை மகனுக்கு சூடு வைத்துள்ளார்.

குறித்த சிறுவன் அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் சிறுவனை விசாரித்த போது சிறுவன் நடந்த விடயத்தை கூறியுள்ளார்.

சிறுவனின் நிலையை அறிந்த பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை