முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான- இசைப்பிரியன் திடீர் மரணம்




முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று(25-07-2024) காலை காலமானார்.

சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் கால் பதித்தவர் இசைப்பிரியன். இசைப்பிரியன், வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்தில் பணி புரிந்துள்ளார்.




யாழ்ப்பாணம் - ஆரியகுளத்துக்கு அருகில் உள்ள அறை ஒன்றில் நண்பர் ஒருவரோடு தங்கியுள்ளார். இந்நிலையில் காலமை சாப்பாடு கட்டி வர போகும் போது, நெஞ்சை பிடித்துக் கொண்டு ஏலாது என சொல்லி இருக்கிறார்.

நண்பர் மருத்துவமனைக்கு போவோம் என கேட்க மறுத்திருக்கிறார். பின் அவரின் கையிலேயே மயங்கி சரிந்துள்ளார். நண்பர் தனக்கு தெரிந்த மருத்துவ நண்பரை உதவிக்கு அழைத்திருக்கிறார்.


அதற்கிடையில் உடல் சில்லிட்டு போனதாக நண்பர் கூறினார். சடலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று அறிக்கையின் பின் தான் என்ன காரணம் என தெரியவரும்.

அதேவேளை இசைப்பிரியன் , வடபோர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடரின் சகோதரரும் ஆவார். அதேவேளை இசைப்பிரியனின் தாயார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் காலமாகி விட்டார்.


இந்நிலையில் ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் இவரின் திடீர் இழப்பு அவரது  நண்பர்களுக்கு   பேரதிர்ச்சியாக உள்ளது.
புதியது பழையவை