தமிழ்த் தரப்புடன் அண்ணாமலை விசேட சந்திப்பு!



மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அஞ்சலி  செலுத்தும் விதமாக அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை  நாடாளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன், கலையரசன்  மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பானது  நேற்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் பற்றியும், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழகத்துக்குமான உறவினை பலப்படுத்தும் வகையில் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த இரா.சாணக்கியன்,

”இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நிலத் தொடர்பு ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அதன் மூலம் கூடுதலாக பயனடைய போவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தான்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்தியாவினுடைய முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முதலீட்டாளா்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது பற்றியும் விாிவாகக் கலந்துரையாடியிருந்தோம்.

அதிலும் இந்தியாவின் முதலீடுகள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும்போது, வடக்கு கிழக்கிற்கும் இந்தியாவுக்குமான அரசியல் ஸ்திரத்தன்மையினை சிறப்பாகப் பேணமுடியும் என்பது தொடர்பான விடையங்களும் கலந்துரையாடப்பட்டன.

மாகாணசபை முறைகளுடாக மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதிலும் தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கட்சியினுடைய தலைமையின் கீழ் மாகாணங்கள் இயங்குமாக இருந்தால், கூடுதலாக முதலீடுகள் உள்வாங்கி தற்போது மத்திய அரசுடன் செயல்படுவதை விட எமது மாவட்டங்களுக்கான செயல் திட்டங்களை மாகாண மட்டத்தில் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இவற்றினை செய்வதற்கு இந்தியாவின் கரிசனை எம் மக்கள் மீது வேண்டும் என்பதனை பற்றி நாம் வலியுறுத்திதினோம்.

தேர்தல்கள் நடைபெறும் காலகட்டம் என்பதனால் இந்தியா இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் மேலும் தொிவித்தாா்.
புதியது பழையவை