ஐஎம்எப் உடனான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். 2025ஆம் ஆண்டுக்கான வருடம் வரவு செலவுத் திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள கடன் உடன்படிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது. அதன் பிரதிபலனாக இன்று நாட்டுக்கு தேவையான எரிபொருள், உரம் மருந்து உணவு ஆகியவை கையிருப்பில் உள்ளன.
ஹர்ஷ டி சில்வா எம்பி கூறுவது போல் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை ரத்து செய்தால் அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தைக் கூட முன் வைக்க முடியாது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உட்பட நலன்புரி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விடும். அது மட்டுமன்றி அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய நினைக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த அரசாங்கத்தை இரண்டு வாரங்களுக்கு கூட முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையே உருவாகும்.
அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.