ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்குறிய மந்தாரநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இன்று (21-08-2024) காலை தோண்டியெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு தாதியாக சேவையாற்ற அக்கரப்பத்தனை பிரதேசத்திலிருந்து சென்ற பெண் கடந்த ஆறு மாதங்களாக காணாமற்போயுள்ளதாக மந்தாரநுவர பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டப்பகுதியில் காணாமற் போன பெண் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய உடலை குழியில் இருந்து தோண்டியெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட இரசாயண தடயவியல் புலனாய்வு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.