வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!



அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவு வழங்கும் திட்டமானது முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியோ வெறும் ஜனரஞ்சக வார்த்தையோ அல்ல, அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,


எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80.000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம்.


அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான நடவடிக்கைகள். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மேற்கொண்டார்.

நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது. முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம்.


நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கான சக்தியை பெற்றுக் கொடுப்பது அவசியம். அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர். அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.


எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரையை அதில் உள்ளடக்கியுள்ளது. அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
புதியது பழையவை