இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று வியாழக்கிழமை (01-08-2024) கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்சஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவர்கள் இருவரையும் இன்று (02-08-2024) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று(2) இடம்பெற்றது.
விசாரணைகளையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொழும்பு நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்குக்கு விண்ணப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களை இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு நீதிமன்றம் கட்டளைப்பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.