ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று இலங்கை தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான, 51 இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகின்றது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூலமாக விரிவான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் நாளில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்துக்குப் பின்னர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு இணையான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான பிரேரணையை முன்னகர்த்த வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தலைமையில் குறித்த குழுவினர் ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.

மேலும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர் சபிதா ரத்தீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்டத் தலைவி சறோஜா சண்முகம்பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளனர்.

அங்கு இவர்கள் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை