இந்தியாவில், கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண்ணொருவரின் வயிற்றிலிருந்தே குழந்தையின் எலும்புகள் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.
பாதி அளவில் கலைந்த கரு
எனினும், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதனால் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பாத அந்த பெண் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரையால் பாதி அளவிலேயே கரு கலைந்ததுள்ளது.
இதனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள அரச மருத்துவமனையில் கடந்த வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை அகற்றியுள்ளதுடன் தற்போது அந்த இளம் பெண் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.