நாட்டில் எதிர்வரும் (14-11-2024)ஆம் திகதி வியாழக்கிழமை புதிய பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்கான பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் (11-11-2024)ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தேர்தலுக்கான அமைதிக்காலம் அமுலாக்கப்படும் என்றும் இந்த அமைதி காலப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேபோன்று, சமய வழிபாட்டு இடங்கள் மற்றும் சமயத் தலைவர்களை பிரசாரச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதை வேட்பாளர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
எதிர்வரும் குறுகிய காலப்பகுதியில் தேர்தல் பிரசாரம் தொடர்பில் அவ்வாறான சம்பவங்கள் பதிவானால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று சகல தேர்தல் மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள், தெரிவத்தாட்சி அதிகாரிகள், பிரதி மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் (06-11-2024) கொழும்பில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போதும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 08 தினங்களில் முன்னெடுக்கவேண்டியுள்ள பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தலும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் மேற்காண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தபால் மூல வாக்களிப்புக்கான விசேட தினம் இன்றுடன் நிறைவடைகிறது.
ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் இந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் 13,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,024 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்குத் தேவையான அதிகாரிகள், வாகனங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் என சகலதும் மாவட்ட அலுவலகங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே, எஞ்சியிருக்கும் குறுகிய காலப் பகுதியிலும் இதுவரைகாலமும் செயற்பட்டது போன்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை சகலரும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் தேர்தலுக்கான அமைதிக்காலம் அமுலாக்கப்படும். எனவே, இந்த அமைதி காலப்பகுதியில் பிரசாரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
(11-11-2024)ஆம் திகதியின் பின்னர் எக்காரணத்துக்காகவும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடாது.
அதேபோன்று, வேட்பாளர்களின் குடும்பத்தால் வீடு வீடாகச் சென்று பிரசாரங்களைச் செய்ய முடியாது. அது சட்டவிரோதச் செயற்பாடாகும். பிரசாரச் செயற்பாடுகளுக்காக சமய வழிபாட்டு இடங்கள் மற்றும் சமயத் தலைவர்களை வழிபாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை வேட்பாளர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக, பிரித் ஓதுதல், ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் புகைப்படங்களை தனிப்பட்ட பிரசாரங்களுக்குப் பயன்படுத்தவும் முடியாது.
தடைவிதிக்கப்பட்டுள்ள இடங்களில் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போன்று வீதியோரங்களில் இருக்கும் எல்.ஈ.டி. டிஜிட்டல் திரைகளிலும் பிரசாரப் போஸ்டர்களை காட்சிப்படுத்துவதும் சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். எனவே, இந்தக் காலபகுதியில் வேட்பாளர்களும் எல்.ஈ.டி. டிஜிட்டல் திரைகளுக்கு பொறுப்பான நிறுவனங்களும் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும். ஆலோசனைகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.