மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழைவீழ்ச்சியினால் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அனைத்து தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
இந்நிலையில் வெல்லாவெளியிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் பிரதான போக்குவரத்து வீதி வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி ஊடாக ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதியில் போக்குவரத்துச் செய்யும் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வெள்ள நீர் பாயும் அவ்விடத்தில் மக்களை பாதுகாப்பான பயனத்தை மேற்கொள்வதற்காக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் உழவு இயந்திரம் மூலம் ஏற்றி இறக்க்கும் சேவை இடம்பெற்று வருகின்றது.
மண்டூர், றாமடு, சங்கர்புரம், கணேசபுரம், தம்பலவத்தை, மற்றும் அம்பாறை மாவட்டத்திற்குச் செல்லும் மக்களும் பெரிதும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பட்டிருப்பு போரதீவு பிரதான வீதி மற்றும் பழுகாமம் பெரியபோரதீவு வீதியாலும் வெள்ள நீர் பாய்கின்றன.
ஆனைகட்டியவெளி வீதி ஆகிய வீதிகளையும் ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்களும், பலத்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உறுகாமம், நவகிரி, அகிய பிரதான குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள், தெரிவிக்கின்றனர்.
எனினும் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பழுகாமத்துக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக் குளம், வெல்லாவெளிக்குளம், வட்டிக்குளம், பொறுகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள சிறிய குளங்களும், முற்றாக நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.
பெய்துவரும் பலத்த மழையினால் கிராமங்களினுள் அமைந்துள்ள பெரும்பாலான உள்வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதனால் கிராமங்களுக்கிடையில் ஏற்படும் உள்ளுர் போக்குவரத்துக்கள் செய்வதிலும், மக்கள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.