ஈழத்துக் கூத்தாளுமையாக விளங்கிய அண்ணாவியார் - பொன்னம்பலம் இறைபதாம் அடைந்தார்



மட்டக்களப்பு படுவான் பெரும்நிலப்பரப்பிலடங்கும் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பிறந்து தமிழரின் அடிநாதமான கூத்துக்கலையை நாடறியச் செய்த பெரும் கலைஞர் பொன்னம்பம் அவர்கள் மண்ணுலகுக்கும் தான் நேசித்த கலையுலகுக்கும் விடைகொடுத்து இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

கூத்துக்கலையை ஈழத்துக் கூத்தாளுமையாக விளங்கிய அண்ணாவியார் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் தேர்ந்த புலமையும், ஆற்றலும் பெற்றவர். ஊர் ஊராகச் சென்று தனது கலைச் சேவையைச் செய்த பெருங்கலைஞர் ஆவார்.

இவரது விசேடமான கூத்தாற்றல் தென்மோடிக் கூத்தாகும். அதில் நொண்டி நாடகத்தில் நொண்டிக்கு ஆடி பெயர் பெற்று ஊர் மக்களால் 'நொண்டிப் பொன்னர்' எனப் பெருமிதத்துடன் அழைக்கப்படுபவர்.

கூத்தின் சூழலில் வாழ்ந்த பொன்னம்பலம் அண்ணாவியார் 18 வயதில் கிரான் குளத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி அண்ணாவியார் பழக்கிய நொண்டி நாடகத்திலேயே நொண்டியாக ஆடினார்.

பண்டாரியாவெளியில் நொண்டி நாடகம் இவரால் பயிற்றுவித்த பொழுது கூத்தர்கள் பாட்டை விடும் பொழுது, ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத பொழுது, நடிப்பை உடலுக்குக் கொண்டுவர முடியாத பொழுது, வாளைச் சுழற்றி ஆட அவதியுறும் பொழுது அக்கணப்பொழுதில் மத்தளம் கட்டப்பட்ட நிலையில் சொல்லிக்கொடுத்து பயிற்றுவித்தார்.

இவ்வாறே, 2019ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் ஆற்றுகை மையமாகக் கூத்தைக் கற்ற பொழுது மாணவர்களுக்கும் ஆட்ட தாளங்களையும், விருத்தம், பாடல்களையும் செம்மைப்படுத்தியமை அவரது கூத்தாளுமையை மேம்படுத்தியது. மாணவர்களுக்கு பொன்னம்பலம் அண்ணாவியாரை மிகவும் பிடிக்கும்.

கூத்தினை ஆடிக்காட்டிப் பயிற்றுவித்துத் திருத்தும் திறன் படைத்தவர். படுவான் கரையில் தனது கூத்தாற்றலை முழுமையாக வெளிப்படுத்திய இவர், சமூகத்திலும் முக்கிய ஆளுமையாகக் காணப்பட்டவர். கோயில் தலைவராக, நாட்டுக்காக உழைத்த நல்ல விவசாயியாக, பட்டிக்காரராகச் செயற்பட்ட உள்ளூர் பிரதிநிதி ஆவார்.

பண்டாரியாவெளியில் அவரது கூத்து மாணவர்களையும், கூத்து அண்ணாவிமாரை உருவாக்கியுள்ளார்.


படுவான்கரையில் கன்னங்குடாவிலும், கரவெட்டியிலும், விளாவட்டுவானிலும் தனித்துவமான வடமோடி, தென்மோடிக் கூத்து ஆட்ட, பாட்டுத் தனித்துவம் உள்ளது போன்று பண்டாரியாவெளி, அரசடித்தீவு, கடுக்காமுனை, அம்பிளந்துறை, மகிழடித்தீவு போன்ற கிராமங்களிலும் வடமோடி, தென்மோடி ஆட்ட, தாளங்களில் தனித்துவமும் வித்தியாசமும் உண்டு. இதனைப் பொன்னம்பலம் அண்ணாவியார் தன்னத்தே கொண்டிருந்தார். வடமோடியில் கடுக்காமுனை சி.தீபன் அண்ணாவியிடம் இத்தனித்துவம் உண்டு.

'கலாபூசணம் விருது', 'கலைக்கூத்தன் விருது' ஆகிய விருதுகளைப்பெற்று புகழ்பெற்றவர்.

புதியது பழையவை