புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூடு. சட்டத்தரணி வேடத்தில் உதவிய பெண்ணும் அடையாளங்காணப்பட்டார்



புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19-02-2025) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் குற்றவாளியொருவர் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கிதாரிக்கு பெண்ணொருவர் உதவியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க விஷேட ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினர் தலைமையிலான ஐந்து குழுக்கள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) உதவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

சந்தேக நபர்கள் இருவரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பெண் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கி ஏந்திய நபர், வக்கீல் போல் மாறுவேடமிட்டு, அடையாளங்காணப்படாமல் வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். அதே நேரத்தில், அவருக்கு உதவிய பெண்ணும் வழக்கறிஞர் போல் உடையணிந்திருந்ததால், இருவரும் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படாமல் தப்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சஞ்சீவ குமார சாமரரத்ன சாட்சியமளிக்க முன்னிலையாகும் போதே சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கடத்தி வந்துள்ளார். துப்பாக்கியேந்திய நபர் முதலில் ஆயுதம் ஏதுமின்றி நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அந்தப்பெண் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நீதிமன்றப்பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

உடல் அல்லது பாதுகாப்புச் சோதனைகளிலிருந்து வழக்கறிஞர்கள் அல்லது நீதிபதிகளுக்கு விலக்களிக்கும் உத்தரவுகள் எதுவுமில்லை.

எதிர்காலத்தில் அனைத்து நபர்களையும் பாதுகாப்புத் சோதனைக்குட்படுத்த சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்" என மேலும் மனதுங்க கூறினார். 
புதியது பழையவை