தமிழினத்தின் கரிநாள் - கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!



இலங்கையின் சுதந்திரநாளான இன்றைய தினத்தை (04.02.2025) “தமிழர் தாயகத்தின் கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரியும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது.




இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் விடயங்களை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர்.

1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

3. பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்

7. தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.

10 எமது நிலம் எமக்கு வேண்டும்.

11. தாயகம், தேசியம், அரசியல் சுயநிர்ணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்

12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

13 சர்வதேசம், வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.

14. எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.
புதியது பழையவை