கல்முனையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் 2 பேர் கைது!




அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபை காரியத்தில் ஒரு இலட்சம் ரூபாய் லஞ்ச வாங்க முற்பட்ட போதே லஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று (22-04-2025) செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகரினால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் லஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

இப் பணத்தினை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடாக கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை இடம்பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் லஞ்சமாக கொடுக்க முற்பட்ட பணத்தையும், 53 மற்றும் 47 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நேற்றையதினம் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை