தமிழ் மக்கள் தம்மை அங்கீகரித்ததாக சர்வதேசத்துக்கு காட்டவே உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்முரம் - சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!



வடக்கு - கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் ஊடாக, தமிழ் மக்கள் தங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை அல்ல என்றும், மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில் இலங்கையின் அரச, இராணுவ நிருவாகம் ஈடுபடவில்லை என்றும் நிரூபிப்பதற்கான ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலைப் பயன்படுத்த எல்லாவகைப் பிரயத்தனங்களையும், மோசடிகளையும் இந்த அரசு மேற்கொண்டுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்றையதினம் முழங்காவில் - நாச்சிக்குடா சந்தியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் தனபாலன் குபேந்திரன்
ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பூநகரி பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை