ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03-05-2025) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார்.
கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் அஷ்வினி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கனேடிய நீதியமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு மேலதிகமாக இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக யுவனிதாவும் வெற்றிபெற்றிருந்தார்.
இந்த நிலையில், இப்போது அஷ்வினி அவுஸ்ரேலியாவில் வெற்றிபெற்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடம் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொத்துதேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் (Uma Kumaran) நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
தற்போதைய நிலையில் மேற்குலக நாடுகளில் தாயக உணர்வு சார்ந்த நிலைப்பாட்டுடன் ஈழத்தமிழ் பூர்வீகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் இடதுசாரி மற்றும் தாராளவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.