பாடசாலைகளுக்கு பிளாஸ்டிக்கில் உணவு விநியோகிப்பது முற்றாக தடை..!



பாடசாலைகளுக்கு பிளாஸ்டிக்கில் உணவு விநியோகிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும் என உணவு வழங்குனர்களுக்கு மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இம்முறை கல்விக்காக அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மாணவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா ?எனும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (06-08-2025) பிற்பகல் 2.30 மணியளவில்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தலைமையில்  பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு கல்வி  வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதை  தொடர்ந்து பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும்,பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெளிவூட்டுவதற்காக  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ. உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.



இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளதுடன்   பாடசாலைகளுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும்,உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு 
கொண்டு வந்து வழங்க முன்பு,அதனை பாடசாலை உணவுக்குழு கட்டாயம் கண்காணிக்க வேண்டும் எனவும்,இதனை பொதுசுகாதார பரிசோதகர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவும்,உணவு தயாரிக்கும் ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதுடன்,200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும், இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி.சாமினி ரவிராஜ், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு தயாரித்து வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள்,சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள்,என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை