கிழக்கில் கண்ணகி அம்மனுக்கு திருச்சடங்கு ஆரம்பம்..!



மட்டக்களப்பில் துறைநீலாவணை,  கோட்டைக்கல்லாறு,மகிழூர்,எருவில்,களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம்,கிரான்குளம்,புதுக்குடியிருப்பு,ஆரையம்பதி,மஞ்சந்தொடுவாய்,வந்தாறுமூலை,கோராவெளி,கன்னன்குடா,மகிழடித்தீவு,கொக்கட்டிச்சோலை,முதலைக்குடா,முனைக்காடு,ஈச்சத்தீவு,கோவில்போரதீவு,மண்டூர் 14 கொலணி,பழுகாமம்,தும்பங்கேணி,38ஆம் கிராமம்,உள்ளிட்ட பல கிராமங்களில்  ஆரம்பமாகின்றது.

வைகாசி பிறந்து விட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல் நய ஓசையெலுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை.

கிழக்கில் பெரும்பாலான தமிழ்க் கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன. திங்கட்கிழமை இன்று(02-06-2025) இவ் வைகாசித் திருவிழா சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது.

வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டில் தெய்வமாகிய கண்ணகி அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் "பத்தினி தெய்யோ"என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.

கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தவரிடையே(தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் "பத்தினி தெய்யோ" என்றும் வழங்கப்பட்டு வந்தது.

கண்ணகி தமிழரிடையே ஒரு புது தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவை பட கூறுகிறது.

வானோர் வடிவில் வந்த கோவலனுடன் தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள்  அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள். 'சிறு குடியீரே சிறு குடியீரே ...'.என்ற சிலப்பதிகார குன்றக்குறவை பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதல் சடங்கு கண்ணகி சடங்காகும்.

அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்கு வந்தது.சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கங்கையில் நீராடி அக்கல்லில் இருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகரம் வஞ்சி மாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தான்.அங்கு இந்திர விழா எடுத்தான்.

இந்த விழாவிற்கு குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறி நிற்கிறது.

இச் சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன.
புதியது பழையவை