இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் -பொலிஸில் முறைப்பாடு!



இலஞ்ச ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சுலோசனா ஹெட்டியாராச்சிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று பணித்துள்ளார்.

இன்று நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் ஹெட்டியாராச்சியும், விசாரணை அதிகாரி திலும் துஷாந்தவும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்திற்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது கலாநிதி மஹேஷி விஜயரட்னவின் மகள் அவர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஹெட்டியாராச்சி உடனடியாக கொழும்பு பிரதான நீதவானுக்கு அறிவித்தார். மேலதிக நடவடிக்கைக்காக கெசல்வத்தை பொலிஸில் உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்யுமாறு நீதவான் அறிவுறுத்தினார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர், சட்டத்தரணி சுலோசனா ஹெட்டியாராச்சி மற்றும் விசாரணை அதிகாரி திலும் துஷாந்த ஆகியோர் இன்று மாலை கெசல்வத்தை பொலிஸில் இந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

கலாநிதி மஹேஷிகா தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் குறித்த விசாரணைகளுக்காக இலஞ்ச ஆணைக்குழு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தது. பிணை தொடர்பான உத்தரவை ஜூலை 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான கலாநிதி மஹேஷி விஜேரத்ன, ஜூன் 17, 2025 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது பிணை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர் ஜூலை 8, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை