விஜய்யின் பேரணியில் கூட்ட நெரிசல் - குழந்தைகள் உட்பட 38 பேர் உயிரிழப்பு.!

​தமிழ்த் திரையுலகின் நடிகர் மற்றும் தமிழாக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட பாரிய கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

​நாமக்கல்லில் நடந்த தனது முந்தையப் பேரணிக்குப் பிறகு, கரூர் நிகழ்வில் விஜய் பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்த நிலையில், அவர் நிகழ்விடத்துக்கு தாமதமாகவே வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறை கூறுகையில் ​பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முண்டியடித்து முன்னேறியபோது, ஒரு கட்டத்தில் சிலர் மயங்கி விழுந்ததால் கூட்ட நெரிசல் (stampede) ஏற்பட்டிருக்கலாம். நிகழ்விடத்தில் குறைந்தது 30,000 பேர் கூடியிருந்தனர் என ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மதிப்பிட்டுள்ளார்.

​விஜய் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததால், கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. வெப்பம் மற்றும் அதிக மக்கள் திரட்டம் காரணமாக மக்கள் மூச்சுத் திணறத் தொடங்கியபோது, விஜய் தனது பேச்சினை நிறுத்திவிட்டு, கூட்டத்தினருக்கு உதவ தண்ணீர் போத்தல்களை வீசத் தொடங்கியதாக காணொளிகள் காட்டுகின்றன.

​இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்ததுடன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் குழுவின் ஊடாக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று இரவு கரூருக்குச் செல்லவுள்ளார்.
புதியது பழையவை