நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் இன்று(18.09.2025) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் தவிசாளரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பிரதேச சபையின் வியாபார பதிவுச் சான்றிதழ் பெறாத நுண்கடன் நிறுவனங்களை முடிய தவிசாளர் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்ற பின்னரே நிறுவனங்களை திறக்கமுடியும் என தெரிவித்தார்.
அத்துடன் நிதி நிறுவனங்களை அழைத்து சில விதிமுறைகளை வழங்கியதாகவும் அந்த விதிமுறைகளை மீறிய வகையில் செயற்படும் நிதி நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் வருடாந்த வட்டி வீதத்தினை 120 வீதம் அறிவிடும் நிலைமை காணப்படுகின்றது. மத்திய வங்கியினால் குறைந்தது 18 வீதமே வட்டி அறிவிடமுடியும் என கூறியுள்ள நிலையிலும் இவ்வாறு அதிக வட்டிகளை மக்களிடம் கோரிவருவதாகவும் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.