மட்டக்களப்பு முனைக்காடு மண்ணிலே வெகு சிறப்பாக இடம்பெற்ற பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டு.!


மட்டக்களப்பு தமிழகத்தில் தமிழர் பாரம்பரியங்களை பேணும் படுவான் பெருநிலத்தின் மண்முனை தென்மேற்கு மண்ணிலே 2025 ம் ஆண்டுக்கான கண்ணகி இலக்கிய விழா வெகு சிறப்பாக அரங்கேறி வருகிறது. இவ் விழாவின் முதல் நாள் விழாவாக போர்த்தேங்காய் அடிக்கின்ற விளையாட்டு நேற்றைய தினம் ( 25/09/2025) ம் திகதி மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயத்திலே இடம்பெற்றிருந்தது.

கண்ணகி இலக்கிய விழாவின் இரண்டாம் நாளுக்கான நிகழ்வாக கண்ணகி வழிபாட்டுடன் தொடர்பு பட்ட கொம்புமுறி விளையாட்டு முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்திலே வெகு சிறப்பாக நடைபெற்றது. கொம்பு முறி விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான கொம்பு விளையாட்டுக்குரிய கொம்புகள் வரிகின்ற நிகழ்வும் கொம்புக்கு உயிர் கொடுக்கின்ற நிகழ்வும் முதலைக்குடா ஸ்ரீ பாலையடி விநாயகர் அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் கொம்பானது ஊர்வலமாக பக்திபூர்வமாக முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் கொம்பு முறி விளையாட்டானது சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியிருந்ததுடன் இப் பாரம்பரிய விளையாட்டை கண்டு களிப்பதற்காக சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர் கொம்புமுறி விளையாட்டுத் திடலே பெரு விழாக் கோலம் பூண்டு காட்சி கொடுத்தது.

பார்போற்றும் பத்தினி கண்ணகி பழிமதுரை எரித்த பின் அவளது அகோரம் தணித்து குளிர்விப்பதற்காக விளையாடப்பட்ட விளையாட்டாக இன்றுவரை கண்ணகி வழிபாட்டுடன் இணைந்ததாக கொம்புமுறி விளையாட்டு விளையாடப்படுகிறது. இன்று பல பிரதேசங்கள் கொம்புமுறி விளையாட்டை மறந்து புத்தக ஏடுகளில் மட்டும் அதனை அறிந்தாலும் மட்டக்களப்பில் மட்டும் அது இன்றும் உயிர்ப்புடன் ஆற்றுகை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு விளையாட்டு என்பதை தாண்டி கண்ணகிக்குரிய வழிபாடாகவே நிகழ்த்துகின்றனர்.

இவ் விளையாட்டில் வட சேரி தென் சேரி என இரண்டு சாரார் இரு அணிகளாக பங்கு கொள்கின்றனர். இது சில இடங்களில் தகப்பன் வழி பரம்பரையணியாக தொன்றுதொட்டு வருகிறது. வடசேரி அணி கோவலனுக்குரியதாகவும் தென்சேரி அணி கண்ணகிக்கு உரியதாகவும் கொள்ளப்படுகிறது.

 உறுதியான மரத்தில் உருவான கொம்பு  போன்ற அமைப்புடைய கிளைகளை பயன்படுத்தி இந்த கொம்புமுறி விளையாட்டை விளையாடுகின்றனர் இவ் விளையாட்டை விளையாடுவதற்கு கொம்புகளை தெரிவு செய்வதிலிருந்து அதனை வைத்து இழுத்து விளையாடுவதற்காக தயார் செய்வது வரை நுணுக்கமான பல தொழில்நுட்பங்களை கையாள்கின்றனர் அதை பார்க்கும் போது வியப்பாக இருந்தது எப்படி இவற்றை கண்டு பிடித்து விளையாடினார்கள் என்று மரம் சார்ந்த கம்புகளும் அவற்றை கட்டுவதற்காக இயற்கையான கொடுகளை பயன்படுத்தினார்கள் சில இடங்களில் நைலோன் கயிற்றையும் பயன்படுத்தியிருந்தனர்.  ஒவ்வொரொவொரு அம்சங்களைப் பார்க்கும் போதும் வியப்பாகவே இருந்தது.

இக் கொம்புமுறி விளையாட்டு விளையாடும் போது கொம்புமுறிப் போடல்களை பாடி அதனை மேலும் சிறப்படையச் செய்தமையினையும் அவதானிக்கமுடிந்தது. எந்த பகுதியினருடைய கொம்பு முறிகிறதோ அவர்கள் தோற்றவவர்களாக கருதப்பட கொம்பு முறியாமல் இருக்கின்ற அணியினர் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவர்

கண்ணகி இலக்கிய விழாவின் பிரதான நிகழ்வானது மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நாளையும் நாளை மறுதினமும் (  27,28) இடம்பெறவுள்ளது.

புதியது பழையவை