மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்று முன்தினம் (11.10.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
08 வருட காலமாக சாமியார் வேடம்
கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில் மட்டக்களப்பு பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்திருந்தது.
இந் நிலையில் குறித்த நபர் செல்வ சந்நிதி ஆலய பகுதியில் சாமியார் வேடத்தில் கையில் வேலுடன் வாழ்ந்து வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆலயத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வேல் உள்ளிட்ட சில பூஜை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.