”இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் சொந்த மக்களை ஏமாற்றுவது போல் இனிமேலும் உலகை ஏமாற்ற முடியாது. இலங்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த இணை அனுசரணை நாடுகள் நினைவூட்டி உள்ளன. இலங்கையின் ஒவ்வொரு உறுதிமொழியும் வெறும் வார்த்தை ஜாலமாகச் சிதைந்து விட்டன’.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தில் இலங்கை தொடர்பான பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பான விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தன் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்க முடிவு எடுத்துள்ள பின்புலத்தில் தமது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கின்றார் சாணக்கியன் எம்.பி.
சுமந்திரன் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் தமது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
”இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்’ தொடர்பான தீர்மானத்தை (ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில்) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியது. 2012 முதல் இதுபோன்ற பல தீர்மானங்கள் இருந்தபோதிலும், 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னேற்றம் இல்லாததால் ஏமாற்றமடைந்தாலும், சர்வதேச மேற்பார்வையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்ததை நாங்கள் வரவேற்கின்றோம்.” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.