திருமலை கடற்கரையில் மீண்டும் வந்தமர்ந்த புத்தர்!

திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்கு சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் மீண்டும் இன்று (17.11.2025) பிற்பகல் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.

சட்ட அனுமதி இன்றி நேற்று இரவு 8 மணியளவில் இந்தப் புத்தர் சிலை இந்த இடத்தில் வைக்கப்பட்டது. 

எனினும், இரவு 11 மணியளவில் துறைமுக பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வந்து பெளத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றினர்.

பின்னர் இந்தப் புத்தர் சிலை துறைமுகப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் வைத்து சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் எனக் கூறினார்.

இதையடுத்து கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களம், பெளத்த பிக்குமார், பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கியிருந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் மீளவும் புத்தர் சிலை, அகற்றப்பட்ட அதே இடத்தில் வைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டு இதன்படி சிலை மீள வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றுண்டிச்சாலை நேற்று அகற்றப்பட இருந்தது. ஆனால், அதனை அகற்றுவது தொடர்பில் தடையாணை உத்தரவு ஒன்றை இந்தப் பகுதி பெளத்த பிக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றிருந்தமையால் தாம் எதிர்பார்த்தபடி இன்று சிற்றூண்டிச்சாலை இடித்து அகற்றப்படவில்லை என திருகோணமலை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரி தகவல் தெரிவித்தார்.

நேற்றுக் (16.11.2025)காலை முதல் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இங்கு பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
புதியது பழையவை