மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாது தடவையும் இன்றைய தினம்(30.12.2025)ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுடன் தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், கடந்த (16.12.2025)ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 10 பேர் ஆதரவாகவும் 04 பேர் எதிராகவும் 05 பேர் நடுநிலையாகவும் ஒருவர் வாக்களிக்காத நிலையில் சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்றைய தினம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருவரும் வரவு செரலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆறு பேர் நடுநிலை வகித்தனர்.
11பேரின் ஆதரவு பாதீட்டினை நிறைவுற்றுவதற்கு தேவையாக இருந்தபோதிலும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 10 பேரின் ஆதரவுடனும் உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் 169ஆம் இலக்க சட்டத்தினை பயன்படுத்தி தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றினார்.