இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இலங்கை கடற்கரையை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு அதிகம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.5 மீட்டர் வரை எழும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் குறித்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதகமான வானிலை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கருணாநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.