மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி குழு ஊடாக முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான முன் மொழிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன்மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கூறி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் முகமாக அரசாங்கம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வீதிகளின் பெயர் விபரங்களை மாவட்ட அபிவிருத்தி குழு ஊடாக தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சாணக்கியன், சிறிநாத், ஹிஸ்புல்லா ஆகியோர் வீதிகளின் பெயர் விபரங்களை அரசாங்க அதிபரின் அனுமதியுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்த நிலையில். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன் மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதால் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டதோடுபாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் இருந்தனர்.
ஏனை அரசாங்கங்களை போல இந்த அரசும் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையால்கிறதா? தமிழரசுக் கட்சிக்குள் அரசு சார்பில் ஒருவர் இருப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செய்கிறதாக என்ற கேள்வி எழுகிறது?
இது குறித்து தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
" அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அபிவிருத்தி குழு ஊடாக நாங்களும் மாவட்டத்தில் உள்ள வீதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பித்திருந்தோம். ஆனால் எமது முன் மொழிவுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் நினைத்தால் நூற்றுக்கணக்கான வீதிகளை அரசாங்கத்தில் இருந்து பெற முடியும். அவ்வாறு பெற்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அரசுக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலை உருவாகும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று. என தெரிவித்தார்.