யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட குமார் என அழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்கள் அமெரிக்காவில் இன்று(20/01/2026)ஆம் திகதி இயற்கை எய்தினார்.
ஈழப்போராட்டத்தின் முத்த முன்னோடிகளில் ஒருவரும், 1970ஆம் ஆண்டு முதலான போராட்ட வரலாற்றின் முன்னணி கதாபாத்திரமும், தமிழ்மாணவர்பேரவை, இளைய வயதில், 1970களில், ஐந்து வருடங்களிற்கு மேலாக, சிங்கள ஒடுக்குமுறை அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டு, சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்று, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரச்சார இயக்குநராக 22 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் இறுதிவரை தினமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
1972ம் ஆண்டு முதல் பல முறை சிறை வாசம் அநுபவித்தவர் 1985ம் ஆண்டு முதல் சர்வதேச மன்னிப்பு சபை நியூயோர்க் தலைமையகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஆரம்ப ஆயுதப்போர் காலத்தில் ரெலோ தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் பயணித்து, தமிழ் ஈழ விடுதலையை நேசித்து, இறுதிவரை தனது பங்கை தனது இனத்திற்காக அர்ப்பணித்து செயல்பட்டவர்.
தமிழ் ஈழத் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் திருவுருவச் சிலையை உரும்பிராய் நகரில் சிறப்புடன் திறந்து வைத்து, தியாகத்தின் உருவத்தை உலகிற்குக் காண்பித்தவர் .
அவரின் நீண்டகால தமிழர் விடுதலைக்கான செயற்பாடுகளும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐ.நா. மட்டத்தில் அவர் வழங்கிய வழிகாட்டலும், உறுதியான மனித உரிமைச் செயற்பாடுகளும் தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மனித உரிமைப் போராட்டம் மறக்கமுடியாதவையாக அப்போது பார்க்கப்பட்டது.
அன்னாரின் ஈழவிடுதலைப்போராட்ட ஆரம்பகால பணிகள் மறக்கமுடியாதது.!
கண்ணீர் வணக்கம்..!
-பா.அரியநேத்திரன்
20/01/2026