கவிஞர் தீபச்செல்வனின் "நினைவில் நாடுள்ளவன்" நூல் வெளியீடு!

தமிழ்த்தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கவிஞர் தீபச்செல்வனின் "நினைவில் நாடுள்ளவன்" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு கவிதை நூலினை வெளியீடு செய்ததோடு முதல் பிரதியை வழங்கிவைத்தார்.

அதன் பின்னர் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் " நினைவில் நாடுள்ளவன் கவிதை நூலானது கிளிநொச்சியில் வெளியீடு செய்யப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. 

போரின் பின்னரான காலத்தில் ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையினை பிரதிபலிப்பதாக தீபச்செல்வனின் எழுத்துக்கள் அமைந்திருக்கிறது. 

தேசியம் சார்ந்த சிந்தனைகளையும் செயல்களையும் அடியோடு அழித்தொழிக்க வேண்டும் என்ற மனோநிலையில் தென்னிலங்கையால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் விசாரணைகளுக்கும் மத்தியில் பேனா மூலம் தனது எழுத்துக்களின் வலிமையால் வெப்பம் தனியாமல் எமது விடுதலை தாகத்தை அடுத்த சந்ததிக்கு கடத்தும் கால கடமையை தீபச்செல்வன் செய்துகொண்டிருப்பது பெருமைக்குரியது. 

ஈழ எழுத்திலக்கியத் துறையின் கலங்கரையாகத் திகழும் தீபச்செல்வன் தொடர்ந்தும் தனது எழுத்தாயுதம் மூலம் எம் இனத்தின் வலிகளையும் வலிமைகளையும் படைப்புகளாக வெளிக்கொணர வேண்டும் என்பதோடு, "நினைவில் நாடுள்ளவன்" எனும் கவிதை நூலுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐ.பி.சி மற்றும் ரீச்சா குழுமத்தின் நிறுவுனர் திரு கந்தையா பாஸ்கரன், சகோதர மொழி எழுத்தாளர் திருமதி திலினா வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை