முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12.01.2026) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதிய பெண் தீராத நோயால் கட்டிலில் படுத்த நிலையில் இருந்துவர, அவரை அவரது கணவர் பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கணவர் நேற்று மாலை 6.00 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அறையில் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கணவர் முதலில் தான் விஷம் உட்கொண்ட பின்னர் மனைவியும் விஷம் கொடுத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பில் கடந்த 12 நாட்களுக்குள் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.