இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - நாடு முழுவதும் 24ஆம் திகதி வரை கனமழை எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி வரை நாடு முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​தற்போது இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு திசை நோக்கி நகர்ந்து மாலைதீவு மற்றும் குமரிக் கடற்பகுதியை அண்மித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி இலங்கைக்கு கிழக்கே மற்றுமொரு புதிய தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ச்சியான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

திரட்டிய மழைவீழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்பதால் வெள்ள அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

​நாளை (19.02.2026)ஆம் திகதி  மழை சற்று குறைந்தாலும், 20ஆம் திகதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கும்.

குறிப்பாக 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பதுளை, மொனராகலை மாவட்டங்களிலும், மத்திய, சப்ரகமுவா மற்றும் தென் மாகாணங்களிலும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

​வெள்ளம் மற்றும் நிலச்சரிவு

அதிக மழைவீழ்ச்சி காரணமாக குளங்களின் வான் பாயும் பகுதிகள், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கோரப்படுகின்றனர்.

அத்துடன், மத்திய, ஊவா, சப்ரகமுவா மற்றும் தென் மாகாணங்களில் நிலச்சரிவு அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
​மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

 உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெப்ரவரி 20 முதல் 24 வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

​எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், தற்போதைய கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வானிலை மாற்றங்களை தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை