களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்வாகச் சீர்கேடு - 6 மணிநேரம் சிகிச்சையின்றி தவித்த விபத்து நோயாளி! பொதுமக்கள் கடும் விசனம்.!

​மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவி வரும் வைத்தியர்களின் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

​நேற்று (05.02.2026)ஆம் திகதி கோவில்போரதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த நோயாளி சிறுவர் ஒருவர் அவசர சிகிச்சைக்காகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மாவட்ட வைத்தியசாலைக்குரிய அனைத்து நவீன சிகிச்சை வசதிகளும் இவ்வைத்தியசாலையில் இருந்தபோதிலும், குறித்த நோயாளிக்கு உரிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்படாமல் சுமார் 6 மணித்தியாலங்கள் அங்கேயே வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

​உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி, நீண்ட தாமதத்திற்குப் பின்னரே மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையின் இந்த மெத்தனப் போக்கு நோயாளியின் உயிருடன் விளையாடும் செயல் என உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

​நிர்வாகத்தின் அலட்சியம்

​இது குறித்து விளக்கம் பெறுவதற்காக எமது செய்தியாளர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியைத் தொலைபேசி ஊடாகப் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், அவர் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.

​சமூக வலைத்தளங்களிலும், பிரதேசசபை கூட்டங்களிலும் வைத்தியசாலையின் முன்னேற்றம் குறித்துப் பெருமையாகப் பேசும் அதிகாரிகள், நடைமுறையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சாதாரண மக்களின் உயிர் காக்கும் சிகிச்சையில் பாராமுகமாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

​போராட்ட எச்சரிக்கை

​"விளம்பரங்களை விட நோயாளிகளின் உயிரே முக்கியம். அடிப்படை வசதிகள் இருந்தும் சிகிச்சையளிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ள இப்பகுதி சமூக அமைப்புகள், இனிவரும் காலங்களிலும் இவ்வாறான அலட்சியப் போக்கு தொடருமானால், பொதுமக்களைத் திரட்டி வைத்தியசாலைக்கு எதிராகப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை