மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தியில் எல்லா அரசிலும் புறக்கணிக்க படுகின்றோம்! - செ. நிலாந்தன் சுட்டிக்காட்டு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய வீதிகளை கொண்ட தளவாய் வட்டாரம் வீதி அபிவிருத்தியில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 19 வது அமர்வில் கலந்து கொண்ட உரையாற்றிய போது அவர் இது குறித்து பேசியிருந்தார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்தார். 

“மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அதி கூடிய வீதிகளை கொண்ட வட்டாரமாக தளவாய் வட்டாரம் காணப்படுகிறது. ஆனால் வீதி அபிவிருத்தி திட்டங்களில் நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். 

செங்கலடி - 01, ஐயன்கேணி , தளவாய், ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்ட தளவாய் வட்டாரத்தில் சுமார் ஐம்பதற்கு மேற்பட்ட வீதிகள் காணப்படுகிறது. இவற்றில் முப்பதுக்கு மேற்பட்ட வீதிகள் மணல் வீதிகளாகவும், கிரவல் வீதிகளாகவும் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. 

குறித்த வீதிகளை புனரமைப்பு செய்வதில் இருந்து மாறி மாறி வந்த எல்லா அரசுகளும் புறக்கணித்தே வந்துள்ளன. 

கடந்த ஆட்சி காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் இருந்தார். அப்போதைய அரசாங்கம் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறினார்கள், மாவட்டத்தில் வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு வீதிகளை தேடி தேடி புனரமைப்பு செய்ததாக கூறினார்கள் ஆனால் எனது வட்டாரத்தில் ஒரு வீதியை கூட புனரமைப்பு செய்யவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மக்கள் வாழும் எமது தளவாய் வட்டாரத்தில் வருடா வருடம் ஏற்படும் மழை வெள்ளத்தினா வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து வரும் நிலையில் வீதிகள் புனரமைப்பு செய்யாத காரணத்தால் வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. 

பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாது நிலை காணப்படுகிறது. வீதிகள் புனரமைப்பு செய்யும் போது வடிகால்கள் இல்லாமல் வீதிகளை புனரமைப்பு செய்வதால் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு வழி இன்றி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நீர் வழிந்தோடுவதால் மக்கள் மழைகாலங்களில் வீடுகளில் வசிக்க முடியாமல் பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எமது வட்டாரத்தில் உள்ள வீதிகளை புனரமைப்பு செய்வதை கடந்த காலங்களில் இருந்த எல்லா அரசும் புறக்கணிப்பு செய்த நிலையில் தற்போதைய அரசிலும் அதே நிலைதான் தொடர்கிறது.

எமது வட்டாரத்திற்கான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கான நிதிகளை மத்திய அரசு, மாகாண அரசுகள் ஒதுக்கீடு செய்யாது புறக்கணிது உள்ளனர்.

மாகாண அரசுக்கு முன்மொழியப்பட்ட வீதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கு முன்மொழியப்பட்ட வீதிகளுக்கான நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்ட வீதிகள் மட்டும் அல்ல எனது வட்டாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள உறுப்பினரால் முன்மொழியப்பட்ட வீதிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் கட்சி வேறுபாடுகள் பார்க்கவில்லை ஆனால் இன ரீதியாக சிந்திக்கிறதாக என்ற கேள்வி எழுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் தமிழர்கள் என்பதால் இவ்வாறு புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பிரதேச சபையில் போதிய நிதி இல்லாததால் வீதி புனரமைப்புகளை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.


இதே வேளை மத்திய அரசு மாற்றும் மாகாண திணைக்களங்களும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.


எனவே பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது முன்மொழிவுகளை கருத்தில் எடுத்து எமது கிராம வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்”என்றார்.
புதியது பழையவை